மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்ற பஞ்சாயத்து கூட்டத்தின் போது அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் செலவு செய்த பட்டியல் தற்போது இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மத்திய பிரதேசத்தில் உள்ள பாத்வாகி பகுதியில் பஞ்சாயத்து கூட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட கலெக்டர், அரசியல் கட்சியினர், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். மொத்தம் 30 பேர் கலந்து கொண்ட நிலையில் அவர்களுக்கு உணவு பொருள்கள், பழங்கள் பரிமாறப்பட்டது. இதைத்தொடர்ந்து அன்று நடைபெற்ற கூட்டத்தில் மட்டுமே ரூ.85 ஆயிரத்திற்கு உணவு சாப்பிட்டதாக பட்டியலில் பதிவு செய்யப்பட்டது.

அவர்கள் பஞ்சாயத்து கூட்டத்தின் போது பாதாம் 3 கிலோ, முந்திரி 6 கிலோ, உலர் திராட்சை 3 கிலோ, ஆப்பிள் 9 கிலோ, வாழைப்பழம் 5 டஜன் மற்றும் திராட்சை, ஆரஞ்சு போன்ற பழங்களும், இனிப்பு வகைகள், மிச்சர், பூந்தி போன்ற நொறுக்குத்தீனிகளும் வாங்கியுள்ளனர்.

அவற்றின் மொத்த விலை ரூ. 85 ஆயிரம் என்று ஹிந்தி மொழியில் பட்டியலில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த பட்டியல் தற்போது இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களிடையே பல விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.