தெற்கு டெல்லியின் சுல்தான்பூர் காவல் நிலையத்தில் சமீபத்தில் வந்த ஒரு செல்போன் வழிப்பறி புகாரை தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய இளைஞர் ஒருவரிடம், மாஸ்க் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், அவரது செல்போனை பறித்து தப்பி ஓடிய சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
தொடர்ந்து 70க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்த வழிப்பறியில் பயன்படுத்தப்பட்ட பைக் ஒரு வாடகை வாகனம் என தெரியவந்தது. வாடகை நிறுவனத்திடம் கேட்டபோது, அந்த இருசக்கர வாகனத்தை ராஜஸ்தானை சேர்ந்த இருவரே அதிக தொகை செலுத்தி எடுத்து சென்றது தெரியவந்தது.
மேலும், அவர்கள் ஒரே ஒரு செல்போனை மட்டும் பறித்து, பிறகு உடனே ராஜஸ்தானுக்கு திரும்பியதும், போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதலில், ராஜஸ்தானில் பதுங்கியிருந்த அந்த இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையின் போது, அவர்கள் செய்த வழிப்பறி ஒரு சாதாரண திருட்டு அல்ல, திட்டமிட்ட திருட்டு என்பது தெரியவந்தது.
இதன் பின்னணி மேலும் சோகமாக இருக்கிறது. வழிப்பறியில் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு ஓராண்டுக்கும் மேலாக முன்பு ராஜஸ்தானை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால், அந்த பெண், திருமணத்திற்கு முன் தனது ஊரிலுள்ள ஒருவரை காதலித்து வந்தார்.
திருமணத்திற்குப் பிறகும் அந்த காதல் தொடர, இருவரும் தனிமையில் அடிக்கடி சந்தித்து வந்தனர். சமீபத்தில், மனைவியின் ரகசிய காதல் தொடர்பாக கணவனுக்கு சந்தேகம் ஏற்பட்டு, அவர் மனைவியின் செல்போன் பாஸ்வேர்டை தெரிந்து கொண்டு, அவரது அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது செல்போனில் சேமித்து வைத்துள்ளார்.
இந்த தகவல் மனைவிக்கு தெரிய வந்ததும், அவர் பெரும் பதற்றத்துக்கு ஆளாக, அதனை அழிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியது. அதற்காகவே, தனது நெருங்கியவர்களின் உதவியுடன், ராஜஸ்தானைச் சேர்ந்த இரு கூலிப்படையினரை ஏற்பாடு செய்து, கணவனின் தொலைபேசியை பறிக்க திட்டமிட்டுள்ளார்.
இதற்கமையே, பைக் வாடகை, கணவனின் நடவடிக்கைகளை கவனித்தல், பின்னர் செயற்கையாக செல்போன் வழிப்பறி செய்தல் உள்ளிட்ட அனைத்தும் திட்டமிட்ட வகையில் நடந்திருக்கிறது. தற்போது மனைவியும், அந்த இருவர் கூலிப்படையினரும் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
