பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும், தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் அருண் ராஜ்க்கும் இடையே கடந்த சில நாட்களாகக் கடும் சொற்போர் நீடித்து வருகிறது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் மௌனம் காப்பது குறித்து அண்ணாமலை விமர்சித்த நிலையில், அதற்கு அருண்ராஜ் கிண்டலாகப் பதிலளித்திருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பேசிய அண்ணாமலை, தான் ஒரு சினிமா நடிகருக்கு ஜால்ரா போடுபவன் அல்ல என்றும், பிரதமர் மோடிக்கு நன்றியுள்ள விசுவாசமான நாய் என்றும் தன்னைத் தானே ஒரு ஒப்பீடாகக் கூறித் தெரிவித்தார். அண்ணாமலையின் இந்தத் “தன்னிலை விளக்கம்” அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது.
அண்ணாமலையின் இந்தக் கருத்துக்குத் தற்போது தவெக நிர்வாகி அருண்ராஜ் மீண்டும் காட்டமான பதிலடி கொடுத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவெக தொண்டர்களாகிய நாங்கள் தந்தை பெரியார் வழியில் வந்த ஆறறிவு கொண்ட மனிதர்கள் என்றும், யாருக்கும் குரைக்கும் நாய்கள் கிடையாது என்றும் ஆவேசமாகத் தெரிவித்தார்.
விஜய் இப்போது நடிகர் அல்ல, அவர் அரசியலுக்காகத் தனது நடிப்புத் தொழிலை முழுமையாகத் துறந்துவிட்டு வந்திருக்கும் மக்கள் சேவகர் என்றும் அவர் குறிப்பிட்டார். ஈரோடு கூட்டத்திற்கு வந்த மக்கள் ஒரு நடிகரைப் பார்க்க வரவில்லை, தமிழகத்தின் முதன்மை அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ள தவெக தலைவரைக் காணவே திரண்டனர் என்றும், தங்கள் கட்சித் தலைவர் கூறியபடி தாங்கள் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்ய மாட்டோம் என்றும் அருண்ராஜ் உறுதிபடத் தெரிவித்தார்.
