சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த நடிகர் சரத்குமார், வரும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று அதிரடியாக அறிவித்துள்ளார். விருதுநகர் தொகுதியை மையமாக வைத்து அவர் அரசியலில் காய் நகர்த்தி வந்ததாகக் கருதப்பட்ட நிலையில், கட்சி தனக்கு வாய்ப்பு கொடுத்தாலும் அதை ஏற்கப்போவதில்லை என்றும், அந்த வாய்ப்பைத் தொண்டர்களுக்கும் மற்றவர்களுக்கும் விட்டுக்கொடுக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதே சமயம், தேர்தல் அரசியலில் இருந்து சரத்குமார் ஒதுங்கினாலும், அவரது மனைவி ராதிகா சரத்குமார் 2026 தேர்தலில் போட்டியிட அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. தன்னை முழுமையாகக் கட்சிப் பணிகளிலும், பாஜவின் வெற்றிக்காகவும் அர்ப்பணிக்கப் போவதாகக் கூறும் சரத்குமார், தனது மனைவி போட்டியிடுவதன் மூலம் குடும்பத்தின் அரசியல் பிரதிநிதித்துவத்தைத் தக்கவைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
