பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் குடியரசு தினத்தன்று தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரியா பாரதி என்ற அந்த ஆசிரியை, தனது வாடகை வீட்டில் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டார்.

அவர் எழுதி வைத்துள்ள உருக்கமான கடிதத்தில், தனது மரணத்திற்கு யாரும் காரணமல்ல என்றும், தீராத உடல்நலக் குறைவு காரணமாகவே இந்த முடிவை எடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது ஐந்து லிட்டர் பாலுக்கான நிலுவைத் தொகையை தனது பையில் இருக்கும் பணத்திலிருந்து பால்காரரிடம் வழங்கிடுமாறு அவர் எழுதியிருந்தது அனைவரையும் கண் கலங்கச் செய்துள்ளது.

எனினும், இது தற்கொலை அல்ல என்றும், திட்டமிட்ட கொலை என்றும் ஆசிரியையின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். பிரியாவின் உடல் தரையில் அமர்ந்த நிலையில் இருந்ததால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறும் உறவினர்கள், கடிதத்தில் உள்ள கையெழுத்து பிரியாவுடையது அல்ல என்றும் வாதிடுகின்றனர்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் குடும்பத் தகராறு காரணமாக அவர் தனது மூன்று மாதக் குழந்தையுடன் தனியாகக் குடியேறிய நிலையில், வரதட்சணை கொடுமை அல்லது குடும்பப் பிரச்சனை காரணமாக அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.