மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரியில், ஓய்வுபெற்ற டிஎஸ்பி அதிகாரி பிரதிபால் சிங் யாதவ் (64) தனது மனைவி மற்றும் இரு மகன்களால் கைகால்கள் கட்டப்பட்டு, ஓய்வூதியப் பணம் பங்கீடு செய்ய மறுத்ததால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவபுரி மாவட்டத்தின் பவுண்டி, சந்தவனி கிராமத்தில் நடந்த இந்தக் கொடூரச் சம்பவம் வீடியோவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோவில், ஒரு மகன் தந்தையின் மார்பில் அமர்ந்து, மற்றொரு மகன் கால்களைக் கட்ட முயலும் காட்சி பதிவாகியுள்ளது. பக்கத்து வீட்டுக்காரர்கள் திரண்டதால், மனைவி மாயா யாதவ் மற்றும் மகன்கள் ஆகாஷ், அபாஸ் ஆகியோர் அவரது செல்போன் மற்றும் ஏடிஎம் கார்டை எடுத்துக்கொண்டு ஜான்சிக்கு தப்பியோடினர்.

பிரதிபால் சிங் யாதவ், கடந்த 15 ஆண்டுகளாக மனைவியிடமிருந்து பிரிந்து வாழ்ந்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் 20 அன்று, மனைவி மற்றும் மகன்கள் ஓய்வூதியப் பணத்தை பங்கீடு செய்யக் கோரி கிராமத்துக்கு வந்தனர். அவர்களுடன் ஜான்சி செல்ல மறுத்ததால் ஏற்பட்ட வாக்குவாதம் மோசமடைந்து, இந்த வன்முறைச் சம்பவம் நடந்தது.

பவுண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தாலும், மகன்களின் எதிர்காலத்தைக் கருதி எஃப்ஐஆர் பதிவு செய்யவில்லை. இதுவரை 20 லட்சம் ரூபாய் ஓய்வூதியப் பணம் பெற்றுள்ள அவர், மீதமுள்ள 33 லட்சத்தை பங்கீடு செய்ய மறுத்ததாகக் கூறப்படுகிறது. தனது மூத்த மகனுக்கு 5 லட்சமும், இளைய மகனுக்கு 15 லட்சமும் வழங்க உறுதியளித்துள்ளார்.

கோரக்பூரில் எம்பிபிஎஸ் பயிலும் அவரது மகள் இன்னும் திருமணமாகாமல் இருக்கிறார், மேலும் இந்தப் பிரச்சினை முற்ற வேண்டாம் என அவர் விரும்புகிறார்.