கடலூர் மாவட்டத்தில் உள்ள தேவனாம்பட்டினம் தெற்கு கடற்கரை சாலையில் மீனவரான உதயகுமார்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனிஷா(24) என்ற பெண்ணுடன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் உதயகுமார் குடல் இறக்கத்தால் பாதிக்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்போது டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறினர். நேற்று முன்தினம் உதயகுமாருக்கு குடல் இறக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் அவர் வார்டுக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால் உதயகுமாருடன் இருந்த உறவினர்கள் செவிலியர்களிடம் கூறியுள்ளனர். உடனடியாக அவர் அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி உதயகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அறிந்த உதயகுமாரின் உறவினர்கள் இரவு நேரத்தில் செவிலியர்கள் மட்டுமே பணியில் இருந்ததாகவும், டாக்டர்கள் யாரும் இல்லை எனக் கூறினர்.

மேலும் செவிலியர்கள் சிகிச்சை அளித்ததால் தான் உதயகுமார் இறந்துவிட்டதாக குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சம்பவ இடத்திற்கு சென்று உதயகுமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன், அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதன் பிறகு உதயகுமாரின் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து மருத்துவ அதிகாரி ஒருவர் கூறியதாவது, குடலிறக்க அறுவை சிகிச்சை செய்தால் மூச்சு திணறல் ஏற்பட வாய்ப்பு இல்லை. இரவு நேரத்தில் ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு டாக்டர் வேலையில் இருப்பார். இதேபோல் உதயகுமாருக்கும் நல்ல முறையில் தான் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் அவர் இறந்ததற்கான உண்மை காரணம் தெரியவரும் என கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.