உகாண்டாவின் வடக்குப் பகுதிகளில் வெளிநாட்டினர் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பதாக அந்நாட்டு உளவுத்துறை அரசுக்கு ரகசியத் தகவல் அளித்தது. இதன் அடிப்படையில் அதிரடி சோதனையில் இறங்கிய அதிகாரிகள், முதலில் நைஜீரியாவைச் சேர்ந்த 62 பேரைக் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து, தலைநகர் கம்பாலா அருகே வெளியாட்கள் நுழைய முடியாதபடி பலத்த பாதுகாப்புடன் ஒரு வளாகத்தில் தங்கியிருந்த 169 பேரை அதிகாரிகள் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 36 பெண்கள் உட்படப் பலரும் சிக்கினர். கைது செய்யப்பட்ட பலரிடம் முறையான பாஸ்போர்ட் அல்லது விசா ஆவணங்கள் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் சிலரை “வேலை வாங்கித் தருவதாகக் கூறி” ஆட்கடத்தல் கும்பல் ஏமாற்றி அழைத்து வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அதே சமயம், அங்கிருந்த சிலர் ரகசியமாக இணைய மோசடிகளில் ஈடுபட்டு வந்த திடுக்கிடும் தகவலும் வெளியாகியுள்ளது. ஆவணங்களின்றித் தங்கியிருந்தவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க உகாண்டா அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியர்கள் பலரும் இதில் சிக்கியுள்ளதால், அவர்களின் நிலை குறித்துத் தூதரக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.