இந்தோனேசியாவில் பள்ளி முடிந்து வீட்டிற்குத் திரும்பிய ஒரு சிறுமி, தனது புத்தகப் பையில் (School Bag) ராட்சதப் பாம்பு ஒன்றைக் கொண்டு வந்து தனது தந்தையை நிலைகுலையச் செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
வைரலாகும் அந்த வீடியோவில், பள்ளி முடிந்ததும் ஒரு சிறுமியும் அவரது தம்பியும் வீட்டிற்குத் திரும்புகின்றனர். அவர்களது தந்தை வீட்டின் முன் காத்துக் கொண்டிருக்கிறார். ஏதோ புதிய பரிசு அல்லது பள்ளித் திட்டம் குறித்து மகள் சொல்லப் போகிறாள் என எதிர்பார்த்த தந்தைக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
சிறுமி மிகுந்த உற்சாகத்துடன் தனது புத்தகப் பையைத் திறக்க, அதிலிருந்து ஒரு நீண்ட ராட்சதப் பாம்பு வெளியே வந்தது. அந்தப் பாம்பை ஒரு விளையாட்டுப் பொம்மையைப் போலக் கையில் எடுத்த சிறுமி, அதைத் தனது தந்தையிடம் காட்டி மகிழ்ச்சியடைந்தார். அவரது தம்பியும் அந்தப் பாம்பைக் கண்டு சிறிதும் அஞ்சாமல் அதைத் தொட்டு விளையாடுவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
View this post on Instagram
தனது மகள் பாம்பைக் கையில் வைத்திருப்பதைக் கண்டு அந்தத் தந்தை அலறித் துடித்தார். “அதைப் போட்டுவிடு… தள்ளிப் போ” என்று அவர் பதற்றத்துடன் கத்துவது வீடியோவில் பதிவாகியுள்ளது. ஆனால், அந்தச் சிறுமி அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், அந்தப் பாம்பைத் தனது செல்லப் பிராணி போலக் கொஞ்சி விளையாடினார்.
இது குறித்து விலங்கியல் நிபுணர்கள் கூறுகையில், “இந்தோனேசியாவின் சில கிராமப்புறப் பகுதிகளில் பாம்புகளுடன் வாழ்வது அவர்களின் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும். அங்குள்ள மக்கள் விஷமுள்ள மற்றும் விஷமற்ற பாம்புகளுக்கு இடையிலான வித்தியாசத்தை நன்கு அறிந்திருப்பார்கள்,” என்கின்றனர்.
இருப்பினும், இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “இதைப் பார்த்தாலே எங்களுக்கு ரத்தம் உறைகிறது”, “அடுத்த முறை இந்தப் பெண் டைனோசரைக் கொண்டு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை” என்று தங்களது அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
