ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க், தனது துணைவி ஷிவோன் ஜிலிஸ் பாதி இந்தியப் பெண் என்ற குடும்ப இரகசியத்தை முதன்முறையாகப் பகிரங்கப்படுத்தியுள்ளார். ஜீரோதா இணை நிறுவனர் நிகில் காமத்டின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய மஸ்க், ஷிவோன் ஜிலிஸின் இந்தியப் பாரம்பரியத்தைக் கௌரவிக்கும் விதமாக, அவர்களது மகன்களில் ஒருவருக்கு ‘சேகர்’ என்று நடுப்பெயரிட்டதாகவும் தெரிவித்தார்.

அந்தப் பெயர், இந்திய-அமெரிக்க விண்வெளி இயற்பியலாளரும் நோபல் பரிசு பெற்றவருமான சுப்ரமண்யன் சந்திரசேகரை நினைவுகூரும் வகையில் வைக்கப்பட்டது என்றும் அவர் விளக்கினார். ஷிவோன் ஜிலிஸ் கனடாவில் வளர்ந்தவர் என்றும், பிறந்து சில நாட்களிலேயே தத்தெடுக்கப்பட்டவர் என்றும் மஸ்க் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஜிலிஸ், யேல் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் தத்துவத்தில் பட்டம் பெற்றவர், மேலும் மஸ்கின் நியூராலிங்க் நிறுவனத்தில் செயல்பாட்டு மற்றும் சிறப்புத் திட்டங்களின் இயக்குநராக பணிபுரிந்து வருகிறார்.

எலான் மஸ்க் மற்றும் ஷிவோன் ஜிலிஸ் தம்பதியருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர் – ஸ்ட்ரைடர், அஜூர் என்ற இரட்டை குழந்தைகள், மகள் ஆர்கேடியா , மற்றும் மகன் செல்டன் லைகர்கஸ். இந்த நேர்காணலின்போது, அமெரிக்காவுக்கு இந்தியத் திறமைகள் ஆற்றி வரும் பங்களிப்பு குறித்தும் மஸ்க் கருத்துத் தெரிவித்தார். அமெரிக்காவின் தொழில்நுட்ப மற்றும் அறிவியல் துறைகள் திறமையான இந்தியக் குடிபெயர்ந்தவர்களால் பெருமளவில் பயன்பெற்றுள்ளன என்று அவர் பாராட்டினார்.

இருப்பினும், அமெரிக்காவில் சமீபகாலமாக விசா கட்டுப்பாடுகள் அதிகரித்து வருவதால் மற்றும் கொள்கைகளில் நிச்சயமற்ற தன்மை இருப்பதால், இந்தியர்களின் அமெரிக்கக் கனவு நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும், இது அமெரிக்காவின் எதிர்காலத் திறமைகளின் ஓட்டத்தைக் குறைக்கக்கூடும் என்றும் மஸ்க் கவலை தெரிவித்தார்.