உலகின் பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க், இனி வேலை என்பது கட்டாயமில்லை என்று கணித்துள்ளார்.
ஜெரோதா (Zerodha) இணை நிறுவனர் நிகில் காமத்தின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய அவர், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபோட்டிக்ஸ் காரணமாக மக்கள் “இனி வேலை செய்ய வேண்டிய அவசியமே இருக்காது” என்று தெரிவித்துள்ளார். “அடுத்த 20 ஆண்டுகளுக்குள், வேலை செய்வது என்பது ஒரு விருப்பத் தேர்வாக மாறிவிடும். அது ஒரு பொழுதுபோக்காக மட்டுமே இருக்கும். இந்த மாற்றம் இன்னும் விரைவாக, 10 அல்லது 15 ஆண்டுகளில் கூட நிகழலாம்” என்று அவர் தனது கணிப்பைத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
எலான் மஸ்க் தனது கருத்தில், “ஏஐ மற்றும் ரோபோக்கள் தொடர்ந்து முன்னேறினால், வேலை செய்வது விருப்பமாகிவிடும், மக்கள் விரும்பும் எந்தப் பொருட்களையும் சேவைகளையும் பெற முடியும்” என்று நம்பிக்கை தெரிவித்தார். எதிர்காலத்தில், மனிதர்கள் சிந்திக்கும் அனைத்துப் பொருட்களையும் ஏஐ வழங்கிவிடும் என்பதால், பணம் என்பதே பொருத்தமற்றதாக (Irrelevant) மாறிவிடும் என்று அவர் கூறினார்.
மேலும், “ஏஐ மற்றும் ஹியூமனாய்டு ரோபோக்கள் வறுமையைப் போக்கும்” என்றும், மேம்பட்ட அமைப்புகள் அனைவரையும் செல்வந்தர்களாக மாற்றும் என்றும் மஸ்க் வலியுறுத்தினார். எதிர்காலத்தில், மின் உற்பத்தி (Power Generation) முக்கியப் பொருளாதார சக்தியாக மாறும் என்றும் அவர் கணித்துள்ளார்.
