உத்தரகண்ட் மாநிலம் தாரி தேவி கோயில் அருகே பாயும் அலகநந்தா ஆற்றில், இரண்டு விசைப்படகுகள் சினிமா பாணியில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த அதிர்ச்சி வீடியோவில், ஆற்றில் இரண்டு படகுகள் அதிவேகமாகச் சென்று கொண்டிருக்கின்றன.

அப்போது முன்னால் சென்ற படகு ஓட்டுநர் சாகசம் செய்கிறேன் என்ற பெயரில் திடீரென படகைத் திருப்ப முயல, பின்னால் வந்த படகு நிலைதடுமாறி முன்னால் சென்ற படகின் மீதே ஏறிப் பாய்ந்தது.

மோதிய வேகத்தில் படகு கவிழும் நிலைக்குச் சென்றதைக் கண்ட அந்த ஓட்டுநர், தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மின்னல் வேகத்தில் ஆற்றில் குதித்தார்.

நல்லவேளையாக அந்தச் சமயத்தில் படகில் பயணிகள் யாரும் இல்லாததால் மிகப்பெரிய உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. “முறையான பாதுகாப்பு விதிகள் இல்லையென்றால் இதுபோன்ற சாகசங்கள் பெரும் விபத்தில்தான் முடியும்” என இந்த வீடியோவைப் பார்க்கும் நெட்டிசன்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.