பீகார் மாநிலம் பாட்னாவில் மெட்ரிக் (10-ம் வகுப்பு) தேர்வு எழுதச் சென்ற மாணவி கோமல் குமாரி, சில நிமிடங்கள் தாமதமாக வந்ததால் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் மனமுடைந்த அந்த மாணவி, ரயில் முன் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. போக்குவரத்து நெரிசலால் ஏற்பட்ட சில நிமிடத் தாமதம், ஒரு இளம் உயிரைப் பறித்துள்ளதோடு, கல்வி முறையின் கடுமையான விதிகள் குறித்தும் பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

​தேர்வு மையத்தின் வாசலில் நின்று “சார், இது என் எதிர்காலம், என்னை உள்ளே விடுங்கள்” என்று அந்த மாணவி கதறியும் அதிகாரிகள் இதயமே இல்லாமல் கதவை மூடிக் கொண்டனர். இந்தத் துயரச் சம்பவம் பீகார் சட்ட மேலவையிலும் எதிரொலித்துள்ளது. டிராஃபிக் போன்ற தவிர்க்க முடியாத காரணங்களால் ஏற்படும் தாமதத்திற்கு மாணவர்களைத் தண்டிப்பது முறையல்ல என்றும், விதிகளை விட மாணவர்களின் உயிரே முக்கியம் என்றும் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.