பெங்களூரு மகாலட்சுமி லேஅவுட் பகுதியில் வசித்து வந்த 26 வயது ஜிம் பயிற்சியாளரும் பாடிபில்டருமான கிரண், காதல் தோல்வி காரணமாகத் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரு பெண்ணைத் தீவிரமாகக் காதலித்து வந்த கிரண், தனது வருமானம் முழுவதையும் அந்தப் பெண்ணின் கடன்களை அடைப்பதற்கே செலவு செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்தப் பெண்ணிற்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், அவர் தனது திருமணப் பத்திரிகை மற்றும் புடவையை கிரணிடம் காட்டியுள்ளார். இதனால் கடந்த இரண்டு வாரங்களாகக் கடும் மன உளைச்சலில் இருந்த கிரண், சம்பவத்தன்று மாலை தனது தாயிடம் பேப்பர் மற்றும் பேனா வாங்கி அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டார்.

நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், கதவை உடைத்துப் பார்த்தபோது கிரண் தூக்கில் பிணமாகத் தொங்குவதைக் கண்டு கதறினர். தற்கொலைக்கு முன்னதாக அவர் எழுதிய கடிதத்தில், தனது மரணத்திற்குத் தனது காதலியும் அவரது தாயாருமே காரணம் என்று உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

பல பாடிபில்டிங் போட்டிகளில் பங்கேற்றுப் பதக்கங்களை வென்றுள்ள ஒரு வளர்ந்து வரும் இளைஞர், காதலியின் திருமண ஏற்பாட்டால் தற்கொலை செய்துகொண்டது சக வீரர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், மகாலட்சுமி லேஅவுட் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.