கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் அடுத்த இருகூறை கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் ரகுபதி (35)- தமிழ்ச்செல்வி (30). அவர்களுக்கு அபர்ணா ஸ்ரீ (4) என்ற பெண் குழந்தை உள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கணவன்- மனைவி இருவரும் குடும்ப தகராறு காரணமாக பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

குழந்தை தனது தாயுடன் வசித்து வந்தது. இந்நிலையில் நேற்று மதியம் குழந்தை திடீரென வாந்தி எடுத்து மயக்கம் அடைந்ததாக தமிழ்ச்செல்வி கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அப்போது குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இதுகுறித்து அறிந்த ரகுபதியின் உறவினர்கள் சிலர் குழந்தையை தமிழ்ச்செல்வி தான் கொலை செய்திருக்க வேண்டும் என சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தமிழ்ச்செல்வியை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

அப்போது அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் சரியான பதிலை கூறாததால் மேலும் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் தமிழ்ச்செல்வியை தீவிர விசாரித்தனர். அப்போதுதான் தமிழ்ச்செல்வி தனது குழந்தையை தானே கழுத்தை நெரித்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

இது குறித்த விசாரணையில் தெரிய வந்ததாவது, தமிழ்ச்செல்வி கடந்த ஒரு வருடமாக கணவரை பிரிந்து கட்டிட வேலைக்கு சென்று வந்ததாகவும், அங்கு 35 வயது நபருடன் ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளதும் தெரியவந்தது. இதனை அடுத்து அந்த இளைஞருடன் பல முறை தமிழ்ச்செல்வி உல்லாசமாக இருந்துள்ளார்.

இந்நிலையில் தமிழ்ச்செல்வி தன்னை கல்யாணம் செய்து கொள்ளுமாறு அந்த இளைஞரிடம் கூறிய போது தாராளமாக கல்யாணம் செய்து கொள்ளலாம். ஆனால் உனது குழந்தையை மட்டும் அழைத்து வரக்கூடாது எனக் கூறியுள்ளார். அதனால் தான் பெற்ற குழந்தையை தானே கொலை செய்ய முடிவு எடுத்து நேற்று குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு மயங்கி விழுந்ததாக நாடகம் ஆடியுள்ளார்.

பின்னர் காவல் துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் குழந்தை கழுத்தை நெரித்ததால் உயிரிழந்து உள்ளது என்பது உறுதியாகியுள்ளது. மேலும் இக்கொலைக்கு அவரது கள்ளக்காதலருக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை தீவிர படுத்தியுள்ளனர். கள்ளக்காதலருக்காக பெற்ற குழந்தையை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.