“கல்யாணம் பண்ண முடியாதுனு சொன்னதும் காண்டு!” – மகாராஷ்டிர பொது சேவை ஆணையம் நடத்திய மருந்து ஆய்வாளர் தேர்வில் நடந்த வினாத்தாள் கசிவு ஊழல், ஒரு த்ரில்லர் திரைப்படத்தைப் போலத் திருப்பங்களுடன் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாபெரும் நிர்வாக ஊழலின் பின்னணியில் காதல், துரோகம் மற்றும் பழிவாங்கல் ஆகிய உணர்வுகளே காரணமாக அமைந்துள்ளன.
கடந்த மார்ச் 2026-இல் நடைபெற்ற இத்தேர்வில், மாலேகானைச் சேர்ந்த கௌரவ் என்ற வாலிபர் தனது காதலியான ரிதுஜாவை அரசு அதிகாரியாக்க வேண்டும் என்பதற்காக, தேர்வுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே கசிந்த வினாத்தாளை அவரிடம் கொடுத்துள்ளார். தன் சொந்த சகோதரனும் அதே தேர்வை எழுதியபோதும், சகோதரனைப் புறக்கணித்துவிட்டுத் தனது காதலிக்கு மட்டுமே கௌரவ் உதவியுள்ளார். அந்த வினாத்தாளைப் பயன்படுத்தி ரிதுஜா மாநில அளவில் 7-ஆம் இடம் பிடித்துத் தேர்ச்சியானார்.
ஆனால், தேர்வு முடிவுகள் வந்து அதிகாரியான பிறகு, ரிதுஜா கௌரவைத் திருமணம் செய்ய மறுத்து உறவை முறித்துக் கொண்டார். இதனால் ஏமாற்றமும் ஆத்திரமும் அடைந்த கௌரவ், பழிவாங்கும் நோக்கில் இந்த வினாத்தாள் கசிவு மோசடியின் முழு விபரத்தையும் ஆதாரத்துடன் MPSC அமைப்பிற்கு ரகசிய மின்னஞ்சல் மூலம் அனுப்பி அம்பலப்படுத்தினார்.
கௌரவ் அனுப்பிய அந்த மின்னஞ்சல் அடிப்படையில் மும்பைக் குற்றப்பிரிவுப் போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். இதில் MPSC ஒருங்கிணைப்பு அதிகாரி மூலம் வினாத்தாள் கசிந்து, பயிற்சி மைய இயக்குநர்கள் மற்றும் இடைத்தரகர்கள் வழியாகக் கௌரவிற்கு வந்தது தெரியவந்தது. இந்த சட்டவிரோதப் பரிவர்த்தனைக்காக லட்சக்கணக்கில் பணம் கைமாறியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது MPSC அதிகாரிகள், பயிற்சி மைய பள்ளி முதல்வர் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட காதலன் கௌரவ் உட்பட 6 பேரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், இந்த வினாத்தாள் ரிதுஜாவுக்கு மட்டும்தான் கொடுக்கப்பட்டதா அல்லது வேறு நபர்களுக்கும் விற்கப்பட்டதா என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.ஒரே மெயிலில் 6 பேரை உள்ளே தள்ளிய காதலனின் ரிவெஞ்ச்!
