ஹரியானா மாநிலத்தில் உள்ள ஒரு நகரில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலனுடன் ஓட்டலுக்குச் சென்ற 24 வயது இளம்பெண் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்த காதலன் அங்கிருந்து தப்பியோடி, கிராமத்தில் தன் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற விவகாரம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
அதாவது லிப்ட்டி பாலம் அருகே உள்ள ஒரு தனியார் ஓட்டலில், ஹரியானாவைச் சேர்ந்த 24 வயதுடைய ரூபி என்பவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் அண்குஷ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். கணவர் இந்திய கடற்படையில் பணிபுரிந்து வருவதால் மும்பையில் முகாமிட்டுள்ளார். இந்நிலையில், ஒரு வாரத்திற்கு முன்புதான் ரூபி தனது கணவர் வீட்டிலிருந்து சொந்த ஊரான கேடி சாதிற்கு வந்திருந்தார்.
புதன்கிழமை காலை ரூபி ஒரு இளைஞருடன் ஓட்டலுக்கு வந்துள்ளார். ஆனால், மதிய வேளையில் அந்த இளைஞர் மட்டும் தனியாக வெளியேறிச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அறைக் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த ஓட்டல் நிர்வாகி உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளார். காவல்துறையினர் வந்து கதவைத் திறந்து பார்த்தபோது, ரூபி சடலமாகக் கிடப்பது தெரியவந்துள்ளது.
காவல்துறையினர் ஓட்டல் பதிவேட்டைச் சோதித்தபோது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. சந்தேகத்திற்குரிய அந்த இளைஞர் தனது உண்மையான அடையாள அட்டையை அளித்திருந்தாலும், பெண்ணின் பெயரை மாற்றிப் பதிவு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனினும், பெண்ணின் பையில் இருந்த கல்வி நிறுவன அடையாள அட்டை மூலம் அவர் ரூபி என்பது உறுதி செய்யப்பட்டது.
ரூபியைக் கழுத்தை நெரித்துக் கொன்றதாகக் கூறப்படும் நின்றாஜ் என்பவர், குற்றத்திற்குப் பிறகு கிராமத்திற்குத் தப்பியோடி தன் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றுள்ளார். தற்பொழுது காவல்துறையினர் ஓட்டலில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருவதுடன், பிரேதப் பரிசோதனை முடிவுகளுக்காகவும் காத்திருக்கின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
