விண்வெளி ஆராய்ச்சியில் மனிதர்களை மட்டுமல்லாமல், உயிரினங்களின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்ய பல்வேறு சோதனைகளை நாசா மேற்கொண்டுள்ளது. அந்த வகையில், கடந்த 1984-ஆம் ஆண்டு 3,301 தேனீக்கள் நாசாவின் டிஸ்கவரி விண்கலம் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டன. புவியீர்ப்பு விசை இல்லாத சூழலில் தேனீக்கள் எவ்வாறு செயல்படும், அவற்றால் இயல்பான வாழ்க்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமா என்பதைக் கண்டறிவதே இந்தப் பரிசோதனையின் முக்கிய நோக்கமாக இருந்தது. 

தேனீக்களுடன் ஒரு ராணித் தேனீயும், அவற்றுக்குத் தேவையான உணவும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அமைப்பில் வைக்கப்பட்டிருந்தது. விண்வெளியில் புவியீர்ப்பு விசை இல்லாததால், ஆரம்பத்தில் தேனீக்கள் தங்களது இயக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறின. சில தேனீக்கள் பறக்க முயன்றபோது அவை இருந்த அறையின் சுவர்களில் மோதிக்கொண்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

ஆனால் சில நாட்கள் கடந்ததும் அவற்றின் செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டது. புதிய சூழலுக்கு படிப்படியாகத் தகவமைத்துக் கொண்ட தேனீக்கள், விண்வெளியில் இயல்பாகப் பறக்கத் தொடங்கின. அதைவிட ஆச்சரியமாக, அவை அங்கேயே சுமார் 200 சென்டிமீட்டர் நீளத்தில் தேன்கூட்டையும் கட்டின. எனினும், பூமியில் கட்டப்படும் தேன்கூட்டுடன் ஒப்பிடும்போது அதன் அமைப்பில் சில வேறுபாடுகள் காணப்பட்டன.

ஏழு நாள் பயணத்தின் முடிவில் பெரும்பாலான தேனீக்கள் உயிருடன் இருந்ததாகவும், ராணித் தேனீ சுமார் 35 முட்டைகளை இட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. புவியீர்ப்பு விசை இல்லாத சூழலிலும் தேனீக்கள் தங்களது இயல்பான செயல்பாடுகளை மாற்றியமைத்துக் கொண்டது, உயிரினங்கள் விண்வெளிச் சூழலுக்கு எவ்வாறு தகவமைத்துக் கொள்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள விஞ்ஞானிகளுக்கு முக்கிய தகவல்களை வழங்கியது.