செனகல் நாட்டின் நாடாளுமன்றத்தில் கர்ப்பமாக இருந்த பெண் எம்பியை காலால் மிதித்து தள்ளிய எம்பிக்கள் இருவருக்கு ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

செனகல் என்னும் ஆப்பிரிக்க நாட்டின் நாடாளுமன்றத்தில் கடந்த டிசம்பர் மாதம் முதல் தேதியில் பட்ஜெட் தாக்குதல் நடந்த போது, ஆளும் கட்சியினருக்கும் எதிர்கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பிறகு, இரு கட்சிகளிடையே ஏற்பட்ட சண்டையில் ஆளும் கட்சியின் ஆமி என்டியாயோ கினிபி என்ற பெண் எம்பியை எதிர்க்கட்சியின் எம்.பியான மசாதா சாம்ப் தாக்கினார்.

இதனால், கோபம் அடைந்த கினிபி, அவர் மீது நாற்காலியை தூக்கி வீசினார். அதன் பிறகு எதிர்க்கட்சியை சேர்ந்த மாமடோவ் நியாங் என்ற எம்பியும் அவருடன் சேர்ந்து கினிபியை காலால் மிதித்து தள்ளினார். அப்போது, கினிபி கர்ப்பமாக இருந்ததாக தெரிய வந்திருக்கிறது. இந்நிலையில், தன்னை கொடூரமாக தாக்கிய எம்பிக்கள் மீது அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நீதிமன்றத்தின் விசாரணையில், அந்த எம்பிக்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவர்களை குற்றவாளிகளாக அறிவித்தது. மேலும், அவர்கள் இருவருக்கும் தலா ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.