திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காக்களூர் பூங்கா நகரில் ஓய்வு பெற்ற தமிழ்நாடு அரசு ஊழியரான பச்சையப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கார்த்திகேயன் என்ற மகனும், சுதானா என்ற மருமகளும் இருக்கின்றனர். இதில் சுதானா வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று பச்சையப்பன் தனது மருமகளை அலுவலகம் செல்ல பேருந்தில் ஏற்றுவதற்காக மொபட்டில் திருவள்ளூர் பேருந்து நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில் திருவள்ளூர் உழவர் சந்தை அருகே வளைவில் திரும்ப முயன்ற போது மண் ஏற்றி வந்த லாரி மொபட் மீது பயங்கரமாக மோதியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த பச்சையப்பன் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சுதானாவின் 2 கால்கள் மீதும் லாரி சக்கரம் ஏறி இறங்கியது. இதனால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சுதானவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பச்சையப்பனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.