தெலங்கானாவில் ஹைதராபாத் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தெரு நாய்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. கடந்த பிப்.20 ஆம் தேதி விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுவனை தெருநாய்கள் கடித்து தாக்கியதில் அச்சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். அந்த சம்பவம் நடைபெற்ற சோகம் மறைவதற்குள், அதே ஊரில் மற்றொரு சிறுவன் தெரு நாய்களால் தாக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதன்படி, சைதன்யபுரி மாருதி நகர் சாலை எண் 19ல் உள்ள ஜெயின் மந்தீரில் கடந்த திங்கள்கிழமை இரவு 4 வயது சிறுவன் ரிஷி தெரு நாய்களால் தாக்கப்பட்டான். அச்சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் மற்றும் காலனி மக்கள் ஓடிவந்து தெருநாய்களை கற்கள் மற்றும் கட்டைகளால் விரட்டி அடித்தனர். இதையடுத்து நாய்கள் தாக்கியதில் படுகாயமடைந்த சிறுவன் ரிஷியை பெற்றோர் அப்பகுதியிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது தொடர்பாக பல முறை ஹைதராபாத் மாநகராட்சி நிர்வாகத்திடம் புகாரளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.