கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சவுரிபாளையம் பகுதியில் கோபி என்பவர் வசித்து வருகிறார். இவர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உடையார்பாளையம் பகுதியில் கடை நடத்தி வரும் நாகராஜ் என்பவரிடம் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் ஆகியவற்றை 85 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார். ஆனால் கோபி அவர்கள் கூறிய பணத்தை கொடுக்கவில்லை. இதே போன்று மேகநாதன் என்பவரிடம் 2 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய்க்கு வெல்லமும், மற்றொருவரிடம் 1 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கு கரும்பும் வாங்கி பணத்தை கொடுக்காமல் இருந்துள்ளார்.
இதனால் மூன்று பேரும் கோபியிடம் பலமுறை பணத்தை கேட்டனர். ஆனால் அவர் சரியாக பதிலளிக்கவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பீளமேடு காவல் நிலையத்தில் கோபி மீது புகார் அளித்தனர். அந்த புகாரியின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கோபியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.