சென்னை மாவட்டத்தில் உள்ள பெரும்பாக்கம் நேதாஜி நகரில் முகமது இஸ்மாயில் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோழி இறைச்சி கடை நடத்தி வந்துள்ளார். நேற்று 2 குழந்தைகளையும் அரசங்கழனியில் இருக்கும் தனியார் பள்ளியில் விட்டுவிட்டு முகமது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் பெரும்பாக்கம்- நுங்கம்பாக்கம் சாலையில் சென்று கொண்டிருந்த போது உயர் மின் அழுத்த கம்பி அறுந்து முகமது மீது விழுந்ததால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் சாலையில் சென்ற நாயும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது.

இதுகுறித்த அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முகமது இஸ்மாயிலின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயன்றனர். ஆனால் கோபமடைந்த பொதுமக்கள் பழுதடைந்த மின் கம்பிகளை மாற்ற கோரி பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தான் உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த தாம்பரம் கோட்டாட்சியர் கவிதா அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். சுமார் 4 மணிநேர போராட்டத்திற்கு பிறகு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.