சென்னையை அடுத்த புழல் பெண்கள் சிறையில் உள்ள 200-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகளை பார்வையிட கடந்த வாரம் சிறைக்கு சென்ற போலீசார் அதிரடி சோதனையில்  ஈடுபட்டனர். அந்த சோதனையில் வினோதினி, தாரணி, கலா ஆகிய 3 பெண் கைதிகளிடம் இருந்து செல்போன்கள் இருப்பது தெரியவந்து, பின் பறிமுதல் செய்யப்பட்டது.  நிலையில்,  புழல் பெண்கள் சிறையில் அதிகாரிகள் அதிக கெடுபிடி காட்டுவதாக கூறி, நேற்று சிறையின் துணை அலுவலர் வசந்தி என்பவரை பெண் கைதிகள் 9 பேர் குழுவாக சேர்ந்து தாக்கியதாகவும் மற்றும் கொலை மிரட்டலும் விடுத்ததாகவும் தெரியவந்தது.

மேலும் சிறையில் உள்ள டியூப் லைட்டுகள், ஜன்னல் கண்ணாடிகள் போன்றவற்றை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டதாக புழல் போலீசாரிடம் சிறை துணை அலுவலர் வசந்தி கூறியுள்ளார். உடனே புழல் போலீசார் அதில் ஈடுபட்ட பெண் கைதிகளான வினோதினி, தாரணி, கலா, சத்யா, நாகஜோதி உள்ளிட்ட 9 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் இது தொடர்பாக சிறை உயர் அதிகாரிகள் எடுத்த உடனடி நடவடிக்கையால், பெண் கைதிகளான தாரணி திருச்சி சிறைக்கும், வினோதினி வேலூர் சிறைக்கும், சத்யா கடலூர் சிறைக்கும், நாகஜோதி மதுரை சிறைக்கும் அதிரடியாக மாற்றப்பட்டனர். இச்சம்பவத்தால் புழல் பெண்கள் சிறையில் பரபரப்பு ஏற்பட்டது.