கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் ராமானுஜம் நகர் பகுதியில் மதுரையைச் சேர்ந்த சுரேஷ் சாலையோரம் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி சாலையோரம் சுரேஷ் படுத்துக் கொண்டிருந்த போது திடீரென வந்த நபர் அவர் மீது டீசலை ஊற்றி வைத்துவிட்டு தப்பி சென்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சுரேஷை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு ஊருக்கு போராடிக் கொண்டிருந்த சுரேஷுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீசார்  ஊத்தங்கரையைச் சேர்ந்த சக தொழிலாளியான சுப்பிரமணி என்பவரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது சுப்பிரமணி கூறியதாவது, நானும், சுரேஷும் இணைந்து அடிக்கடி மது குடிப்பது வழக்கம். இருவரும் வழக்கம் போல மது குடித்த போது சுரேஷ் எனது பையில் இருந்த பணத்தை எனக்கு தெரியாமல் எடுத்து விட்டதாக சந்தேகப்பட்டு கேட்டேன். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் பாட்டிலில் டீசல் வாங்கி வந்து சுரேஷ் மீது ஊற்றி கொளுத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றேன் என வாக்குமூலம் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் சுப்பிரமணியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.