ஹிமாச்சல பிரதேச மாநிலம் மண்டி மாவட்டத்தில் மனிதாபிமானத்தை உலுக்கும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. நான்கு குழந்தைகளுக்குத் தாயான ஒரு பெண், தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவானார்.

இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட, மாயமான அந்தப் பெண்ணைப் போலீசார் தேடிக் கண்டுபிடித்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். அங்கே அவரிடம் நடத்திய விசாரணையில் தான் பெரும் ‘ஷாக்’ காத்திருந்தது.

அந்தப் பெண்ணின் கணவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வருகிறார். இந்த இக்கட்டான நேரத்தில், தனது மூன்று குழந்தைகளையும் கணவனையும் அப்படியே விட்டுவிட்டு, தனது காதலனுடன் வாழப் போவதாக அந்தப் பெண் பிடிவாதமாகத் தெரிவித்தார்.

அவரது குடும்பத்தினர் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும், “நான் என் காதலனுடன் தான் வாழ்வேன், திரும்ப வரமாட்டேன்” என அவர் உறுதியாக மறுத்துவிட்டார்.

அந்தப் பெண் மேஜர் (வயது வந்தவர்) என்பதால், அவரது விருப்பத்திற்கு மாறாக போலீசார் யாரையும் கட்டாயப்படுத்த முடியவில்லை. இதனால், தனது கைக்குழந்தையை மட்டும் எடுத்துக் கொண்டு, மற்ற மூன்று குழந்தைகளையும் நோய்வாய்ப்பட்ட கணவனையும் தவிக்க விட்டுவிட்டு அவர் காதலனுடன் சென்றார்.

“புற்றுநோயால் தம்பி ஒரு பக்கம் போராடிக் கொண்டிருக்கிறான், இப்போது இந்தக் குழந்தைகளை யார் கவனிப்பார்கள்?” எனக் கணவனின் சகோதரர் கண்ணீர் மல்கக் கேட்கும் கேள்வி பலரையும் கலங்க வைத்துள்ளது.