பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் தற்போது நடைபெற்று வரும் மாக் மேளா திருவிழா, கோடிக்கணக்கான பக்தர்களின் வருகையால் களைகட்டியுள்ளது. இதில் பல வினோத சாமியார்கள் தங்கள் தவ வலிமையை வெளிப்படுத்தி வரும் வேளையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ் குமார் மஞ்சி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

கடந்த 43 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் கூர்மையான முட்களால் ஆன படுக்கையில் அமர்ந்தோ அல்லது படுத்தோ தனது தவத்தை மேற்கொண்டு வருகிறார்.

“முட்கள் என் உடலை ஒருபோதும் காயப்படுத்தாது; இது இறைவனின் அருள் மற்றும் குரு கொடுத்த ஞானம்” என்று அவர் உறுதியாகக் கூறுகிறார்.

நாள் முழுவதும் கையில் உடுக்கை (டமரு) ஏந்தி முள் படுக்கையில் இருந்தபடியே அவர் பக்தர்களுக்குக் காட்சி அளிக்கிறார். அயோத்தியில் பிரம்மாண்ட கோயில் கட்டப்பட்டுவிட்டது,

ஆனால் காசி மற்றும் மதுராவில் கோயில்கள் கட்டும் வரை தனது இந்தத் தவம் தொடரும் என அவர் சபதம் எடுத்துள்ளார். இவரைப் பார்க்கவும், ஆசி பெறவும் சங்கமத்திற்கு வரும் பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு குவிகின்றனர்.