ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் நடந்த சங்கராந்தி மாடு விடும் விழாவில், இதுவரை யாரும் பார்த்திராத ஒரு அதிசயம் நடந்துள்ளது. வழக்கமாக மாடு விடும் விழாவில் காளைகளை வரவேற்றுதான் பேனர்கள் இருக்கும். ஆனால், கலிகிரிப்பள்ளே கிராமத்தில் நடந்த விழாவில், அப்பகுதியைச் சேர்ந்த திருமணத்திற்கு ஏங்கும் இளைஞர்கள், தங்களது புகைப்படம், பெயர், ராசி, நட்சத்திரம் மற்றும் குடும்ப விவரங்களுடன் “திருமணத்திற்கு இளம்பெண்கள் தேவை” எனப் பெரிய பேனர்களை வைத்துள்ளனர். இதைப் பார்த்த விழாக்குழுவினரும், பொதுமக்களும் ஒரு நிமிடம் திகைத்துப் போயினர்.

இன்று பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவு, பெண்கள் அதிக அளவில் படித்து வெளிநாடுகளிலும், அரசு வேலைகளிலும் இருப்பவர்களை மட்டுமே எதிர்பார்ப்பது போன்ற காரணங்களால், உள்ளூர் இளைஞர்களுக்குப் பெண் கிடைப்பது பெரும் சவாலாக மாறியுள்ளது. இதற்காகப் பல திருமணத் தகவல் மையங்கள் அலைந்தும் பலன் கிடைக்காத விரக்தியில், இப்படிப் பொது விழாவில் பேனர் வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நூதனமான திருமண விளம்பரம் இப்போது சமூக வலைதளங்களில் “90’s கிட்ஸ்களின் வேதனை” எனத் தீயாகப் பரவி வருகிறது.