சீனாவைச் சேர்ந்த உூ (Wu) என்ற இளம்பெண், கடந்த 2016-ம் ஆண்டு தனது காதலனுக்காக ஒரு விசித்திரமான பரிசை வழங்கினார். அதுதான் ‘லவ் இன்சூரன்ஸ்’ (Love Insurance). வெறும் 2,500 ரூபாய் (28 டாலர்) செலுத்தி எடுக்கப்பட்ட அந்த பாலிசியின் நிபந்தனை என்னவென்றால், அந்த ஜோடி குறிப்பிட்ட காலத்திற்குள் திருமணம் செய்துகொண்டால், அவர்களுக்கு 1.25 லட்சம் ரூபாய் (1,400 டாலர்) அல்லது 10,000 ரோஜா பூக்கள் பரிசாக வழங்கப்படும்.

ஆரம்பத்தில் இதைக் கேள்விப்பட்ட அவரது காதலன் வாங் (Wang), “யாரோ உன்னை ஏமாற்றிவிட்டார்கள்” என்று கிண்டல் செய்துள்ளார். ஆனால், பள்ளிப் பருவத்திலிருந்தே காதலித்து வந்த இந்த ஜோடி, கடந்த 2025 அக்டோபரில் அதிகாரப்பூர்வமாகத் திருமணம் செய்துகொண்டனர்.

இதையடுத்து இன்சூரன்ஸ் நிறுவனத்தை அணுகியபோது, அவர்களுக்கு 1.25 லட்சம் ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளது. 10,000 ரோஜாக்களைப் பராமரிப்பது கஷ்டம் என்பதால், அவர்கள் பணமாகவே பெற்றுக் கொண்டனர்.

2017-லேயே இந்த இன்சூரன்ஸ் திட்டம் நிறுத்தப்பட்டாலும், பழைய பாலிசிகளுக்குப் பணம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தச் செய்தி சீன சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், “இந்த இன்சூரன்ஸ் பற்றி எங்களுக்குத் தெரியாமல் போய்விட்டதே” எனப் பல தம்பதிகள் ஜாலியாகப் புலம்பி வருகின்றனர்.