உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் சினிமா படக்கதையை மிஞ்சும் வகையில், ஒரு நபர் இறந்துவிட்டதாக நினைத்து அவரது குடும்பத்தினர் இறுதிச்சடங்குகளைச் செய்து, 13-ஆம் நாள் காரியத்தையும் முடித்து, கொலை வழக்கும் பதிவு செய்த நிலையில், அந்த நபர் திடீரென வீட்டிற்கு உயிரோடு திரும்பிய விசித்திர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது  38 வயதான கிரிதர் சிங் பிஷ்ட் என்பவருக்குக் கடந்த மே 16 அன்று உள்ளூர் கடைக்காரர்களுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. மனநலம் சற்று பாதிக்கப்பட்ட கிரிதரை அமைதிக்குக் குந்தகம் விளைவித்ததாகக் கூறி  போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் மே 21 அன்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட கிரிதர், வீட்டிற்குத் திரும்பாமல் வேறு எங்கோ சென்றுவிட்டார்.

குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காத நிலையில், ஜூன் 13 அன்று அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதை அடையாளம் காண போலீசார் கிரிதரின் குடும்பத்தினரை அழைத்தபோது, அவர்கள் அது கிரிதரின் உடல் தான் என தவறாக முடிவு செய்தனர். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உடலைப் பெற்றுக் கொண்ட குடும்பத்தினர், அனைத்து சடங்குகளுடன் இறுதிச்சடங்குகளைச் செய்து முடித்ததோடு, 13-ஆம் நாள் சடங்குகளையும் செய்தனர். மேலும், கிரிதர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் காவல் நிலையங்களில் குடும்பத்தினர் போராட்டம் நடத்தி, அடையாளம் தெரியாத நபர்கள் மீது கொலை வழக்கும் பதிவு செய்தனர்.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை யாரும் எதிர்பாராத விதமாக கிரிதர் சிங் பிஷ்ட் வீட்டின் வாசலில் உயிரோடு வந்து நின்றதைக் கண்டு குடும்பத்தினரும், அக்கம் பக்கத்தினரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். கிரிதர் உயிரோடு திரும்பியதை அடுத்து, அப்போதே எரிக்கப்பட்ட அந்த அடையாளம் தெரியாத நபர் யார் என்ற புதிய மர்மம் எழுந்துள்ளதால், போலீசாரின் விசாரணை தற்போது வேறு கோணத்தில் திரும்பியுள்ளது.