பெங்களூருவில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஸ்கூல் வேனின் பின் பக்கக் கதவு ஓடும் போதே திடீரென திறந்துகொண்டதால், உள்ளே இருந்த 5 பள்ளி குழந்தைகள் கொத்தாகச் சாலையில் தூக்கி வீசப்பட்ட நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. பெங்களூருவின் கே.ஆர்.புரம் பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. பள்ளிக்கூடம் முடிந்த பிறகு குழந்தைகளை அவர்களின் வீடுகளில் விடுவதற்காக அந்த ஸ்கூல் வேன் புறப்பட்டுச் சென்றுள்ளது. அப்போது சாலையில் இருந்த ஒரு பெரிய பள்ளத்தில் வாகனம் ஏறி இறங்கியபோது, ஏற்பட்ட பலத்த குலுக்கல் காரணமாக வேனின் பின் பக்கக் கதவு திடீரெனத் தானாகத் திறந்து கொண்டது.

அந்த வேனின் ஓட்டுநர், வாகனத்தின் கொள்ளளவை விட மிக அதிகமாக, அளவுக்கு அதிகமான பள்ளி குழந்தைகளை உள்ளே அடைத்து ஏற்றிச் சென்றதே இந்த விபத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. வண்டி பள்ளத்தில் ஏறிய அந்த அதிர்வில், பின் சீட்டில் அமர்ந்திருந்த ஐந்து குழந்தைகள் அடுத்தடுத்து ஓடும் வேனில் இருந்து சாலையில் விழுந்து உருண்டனர்.

இந்த பதைபதைக்க வைக்கும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது எக்ஸ் (X) தளத்தில் ‘@TheSiasatDaily’ என்ற கணக்கில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. அதிர்ஷ்டவசமாகப் பின்னால் வேறு எந்த பெரிய வாகனங்களும் வராததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. விபத்தில் விழுந்த குழந்தைகளுக்கு ஏற்பட்ட காயங்கள் குறித்த முழு விவரங்கள் இன்னும் வெளியாகாத நிலையில், பள்ளி வாகன ஓட்டுநரின் இந்த அலட்சியப் போக்கிற்கு எதிராக நெட்டிசன்கள் பலரும் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.