மத்திய பிரதேச மாநிலம் மொரேனாவில், காணாமல் போன தனது மகளைக் கண்டுபிடித்துத் தருமாறு உதவி கேட்டுச் சென்ற தாய் ஒருவரை, போலீஸ் காவலர் ஒருவர் பிளாஸ்டிக் பைப்பால் கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கராக்பூர் கிராமத்தைச் சேர்ந்த உஷா ஜாதவ் என்ற அந்த பெண், தனது கிராமத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் தனது மகளை அழைத்துச் சென்றுவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் ஏற்கனவே குருகிராமில் புகார் அளித்திருந்தும், அவரது மகள் மேஜர் (வயது வந்தவர்) என்பதால் அங்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

 

இந்நிலையில், தனது மகள் மீண்டும் கிராமத்திற்குத் திரும்பியதை அறிந்த உஷா ஜாதவ் மற்றும் அவரது கணவர் நூராபாத் காவல் நிலையத்தை அணுகி உதவி கேட்டுள்ளனர். பலமுறை அலைந்தும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், சில நாட்களுக்குப் பிறகு போலீசார் உஷா ஜாதவின் வீட்டிற்குச் சென்று அவரை காவல் நிலையத்திற்கு வருமாறு அழைத்துள்ளனர். அதற்கான காரணத்தை உஷா கேட்டபோது, போலீசார் அவரிடம் மிக மோசமாக நடந்து கொண்டதோடு, ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒரு காவலர் பிளாஸ்டிக் பைப்பை எடுத்து உஷாவைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்  எஸ்பி ஆபீசில் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்து, சம்பந்தப்பட்ட காவலர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.