பாஜகவில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து முன்னாள் தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தற்போது வெளிப்படையாக பேசியுள்ளார். சென்னையில் நடைபெற்ற இந்தியா டுடே ரவுண்ட்டேபிள் நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகத்தைப் பற்றிய முக்கிய அரசியல் முடிவுகள் டெல்லியை மையமாக வைத்து எடுக்கப்படுவது தொடர்பாக நீண்ட காலமாக தனக்கு கருத்து வேறுபாடு இருந்ததாக கூறினார். மாநிலத் தலைவர்களுக்கு அதிக சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தமிழகம் மாற்றத்துக்குத் தயாராக இருப்பதாகவும், இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை அரசியல் தலைமை கவனிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
பாஜகவில் இருந்து விலகும் முடிவு திடீரென எடுக்கப்பட்டதல்ல என்றும் அண்ணாமலை கூறினார். 2025-ம் ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்திலேயே கட்சியின் மேலிடத்திடம் தனது முடிவை தெரிவித்ததாகவும், சட்டசபை தேர்தல் முடியும் வரை தொடருமாறு தன்னை கேட்டுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். தேர்தல் முடிந்த பின்னர் மீண்டும் கட்சி தலைமையிடம் பேசி, எந்தவிதமான மோதலும் இல்லாமல் வெளியேற விரும்பியதாக கூறினார். தமிழகத்தில் அரசியல் முடிவுகள் தமிழக மண்ணிலேயே எடுக்கப்பட வேண்டும் என்பதே தனது முக்கிய கருத்து என்றும் அவர் குறிப்பிட்டார்.
#IndiaTodayTamilRoundTable | What drove K. Annamalai to leave the BJP?
Founder & Chief Mentor @annamalai_k responds at the India Today Tamil Nadu Roundtable.#TamilNadu #Politics @Akshita_N pic.twitter.com/RsZ2ZVbsw0
— IndiaToday (@IndiaToday) August 17, 2026
தமிழகத்தில் பாஜக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது தொடர்பான கருத்து வேறுபாடும் தனது விலகலுக்கான முக்கிய காரணங்களில் ஒன்று என அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு தேசிய அளவில் இருந்து முடிவுகளை எடுப்பது எல்லா நேரங்களிலும் சரியாக இருக்காது என்றும் அவர் கூறினார். மேலும், தேசிய அளவிலான வளர்ச்சி திட்டங்களில் குஜராத் மாநிலத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக அவர் விமர்சித்தார். அனைத்து மாநிலங்களுக்கும் சமமான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு என்றும், இதேபோல் மேகதாது அணை விவகாரத்திலும் மத்திய அரசின் நிலைப்பாடு மாறியது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜகவில் இருந்து விலகியிருந்தாலும் பிரதமர் நரேந்திர மோடி மீதான எதிர்ப்பு அல்லது தேசியவாதத்தில் இருந்து விலகல் இல்லை என்றும் அண்ணாமலை தெளிவுபடுத்தினார். மாநிலத்தின் நலன்களை முன்னிலைப்படுத்தும் அதே நேரத்தில் தேசிய அளவிலான பார்வையையும் கொண்ட ஒரு அரசியல் அமைப்புக்கு தமிழகத்தில் இடம் இருப்பதாக அவர் கூறினார். இதற்காக ‘We the Leaders’ என்ற மக்கள் சார்ந்த இயக்கத்தை அவர் தொடங்கியுள்ளார். இந்த இயக்கம் எதிர்காலத்தில் அரசியல் கட்சியாக மாறி, தமிழக தேர்தல்களில் போட்டியிடும் என்று அண்ணாமலை ஏற்கனவே தெரிவித்துள்ளார்.
