உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற திருவிழாவில் ராட்டினம் ஒன்று திடீரென அறுந்து விழுந்த விபத்தில் பலத்த காயமடைந்த இரண்டு பெண்கள் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைக் பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோவின் இந்திரா நகர் சவான் மகோத்சவ் திருவிழா கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அங்கு அமைக்கப்பட்டுள்ள ராட்டினத்தில் பொதுமக்கள் பலர் ஆர்முடன் சவாரி செய்துள்ளனர். அப்போது, எதிர்பாராதவிதமாக ராட்டினத்தின் கூண்டு  திடீரெனக் கழன்று கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

 

இந்த கோர விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, லக்னோவில் உள்ள ஒரு  மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இரண்டு பெண்களின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விபத்து நடந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ராட்டினம் உடைந்ததைத் தொடர்ந்து விபத்தில் சிக்கிய பெண் ஒருவர் அலறித் துடிக்கும் குரல் பதிவாகியுள்ளது. “தயவுசெய்து ராட்டினத்தை நிறுத்துங்கள், எங்களுக்குக் காயம்  ஏற்பட்டுவிட்டது” என்று அவர் கதறும் சத்தமும், கீழே நின்றவர்கள் ஆபத்தை உணர்ந்து ராட்டினத்தை உடனே நிறுத்தும்படி சத்தமிடும் காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன.

மேலும், விபத்து நடந்த பிறகும் கூட ராட்டினம் சிறிது நேரம் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருந்ததாக அங்கிருந்த உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர். பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாமல் அலட்சியமாகச் செயல்பட்ட திருவிழா நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.