இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ் தனியார் பள்ளிகளில் ஏழை எளிய மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் காரைக்குடியில் உள்ள பிரபல தனியார் பள்ளியான மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் தேர்வு செய்யப்பட்ட 38 குழந்தைகளில், ஒரு எல்கேஜி குழந்தையை சேர்க்கச் சென்ற பெற்றோருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த பள்ளி நிர்வாகம், எல்கேஜி குழந்தையைச் சேர்க்க வேண்டும் என்றால் உடனே 16,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், நாளைக்குள் பணத்தைக் கட்டாவிட்டால் அந்த சீட் வேறு குழந்தைக்கு மாற்றப்படும் என்றும் மிரட்டும் தொனியில் அடாவடி செய்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

​”எங்ககிட்ட 16,000 ரூபாய் பணம் இருந்தா நாங்க ஏன் RTE திட்டத்துல அப்ளை பண்ண போறோம்?” என்று அந்த குழந்தையின் தந்தை வேதனையுடனும் ஆதங்கத்துடனும் பேசிய காணொளி தற்போது எக்ஸ் (X) வலைதளத்தில் பயங்கர வைரலாகி வருகிறது.

இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் விசாரித்தபோது, எல்கேஜி புத்தகங்களுக்காகத்தான் 16,000 ரூபாய் கேட்டதாகக் கூறி மழுப்பலாகப் பதிலளித்துள்ளனர். இலவசக் கல்வித் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட ஏழைக் குழந்தையிடம், புத்தகக் கட்டணம் என்ற பெயரில் இவ்வளவு பெரிய தொகையைக் கேட்டு மிரட்டிய சம்பவம் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.