முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி வரும் பிப்ரவரி 24-ஆம் தேதி மதுரையில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்குமாறு தனது ஆதரவாளர்களுக்கு வி.கே.சசிகலா அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள உருக்கமான கடிதத்தில், தமிழக அரசியலில் நிலவும் எதிரிகளையும் துரோகிகளையும் வேரறுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும், அதற்காக அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ஒன்றுபடுவோம், வென்று காட்டுவோம் என்ற முழக்கத்துடன் அவர் விடுத்துள்ள இந்த அழைப்பு, சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் சசிகலா ஆதரவாளர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பொதுக்கூட்டத்தின் போது சசிகலா தனது புதிய அரசியல் கட்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்றும், வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துவார் என்றும் அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்படுகிறது.
நீண்ட நாட்களாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒருங்கிணைக்க முயற்சி செய்த அவர், தற்போது தனிப் பாதையில் பயணிக்கத் திட்டமிட்டுள்ளதையே இந்தக் கடிதம் உணர்த்துவதாகக் கருதப்படுகிறது. ஜெயலலிதாவின் பிறந்தநாளிலேயே இந்த முக்கிய அறிவிப்பு வெளியாகவுள்ளதால், தென் மாவட்டங்களில் சசிகலாவின் அரசியல் நகர்வுகள் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
