விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டம் வரும் 23-ஆம் தேதி வேலூரில் நடைபெற உள்ளது. சுமார் 5,000 பேர் வரை பங்கேற்க உள்ள இக்கூட்டத்திற்காக, கட்சி வரலாற்றிலேயே முதல்முறையாக பிரம்மாண்டமான பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சமீபத்தில் சேலத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது, கடும் வெயில் காரணமாக ஒரு தொண்டர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அத்தகைய அசம்பாவிதங்கள் மீண்டும் நடக்கக்கூடாது என்பதில் கட்சி நிர்வாகம் மிகுந்த உறுதியாக உள்ளது.
இதனைத் தொடர்ந்து, வேலூர் கூட்டத்தில் பங்கேற்கும் தொண்டர்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கத்தைக் குறைக்க பந்தல் அமைப்பதோடு மட்டுமின்றி, ஒவ்வொரு நாற்காலிக்கும் அடியில் குடிநீர் பாட்டில்கள் வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சேலம் சம்பவத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, தொண்டர்களின் நலன் கருதி தவெக எடுத்துள்ள இந்த அதிரடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வேலூர் மாவட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தையும் நிம்மதியையும் ஏற்படுத்தியுள்ளது.
