இந்தியா கூட்டணிக்குத் தேசிய அளவில் தலைமை வகிக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அல்லது மம்தா பானர்ஜி பொருத்தமானவர்கள் என உத்தவ் சிவசேனா கட்சியின் சாம்னா நாளிதழ் வெளியிட்ட தலையங்கம் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

இது குறித்துக் காரமான விமர்சனங்களை முன்வைத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத், ஸ்டாலின் தலைமையேற்க வேண்டும் எனச் சிலர் கூறுவதைக் கேட்டால் சிரிப்பு வரவில்லை என்றும் நாட்டின் நிலையை நினைத்து ரத்தக் கண்ணீர் தான் வருகிறது என்றும் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

விளம்பர வெளிச்சத்திலேயே காலத்தைக் கடத்தும் ஒரு அரசு, இப்போது தேசிய அரசியலுக்கு வழிதேடப் போவதா என அவர் கேள்வி எழுப்பியதோடு, மேடையில் குறிப்பு இல்லாமல் ஒரு நிமிடம் கூடப் பேசத் தெரியாதவர் அகில இந்தியத் தலைவர்களுக்கு எப்படி ஆலோசனை வழங்குவார் என்றும் கிண்டல் செய்துள்ளார்.

தமிழகத்தில் கொள்கைக் குன்றாகத் திகழும் தவெக தலைவர் விஜய் களமிறங்கிய பிறகு பலருக்குக் கை கால் நடுக்கம் எடுக்கத் தொடங்கிவிட்டதாகவும் அந்தப் பயத்திலிருந்து தப்பிக்கவே ஸ்டாலினுக்குத் தேசியத் தலைமை என்கிற பட்டத்தைச் சூட்டி அவரை இங்கிருந்து அனுப்பிவிடச் சிலர் துடிக்கிறார்கள் என்றும் அவர் சாடியுள்ளார்.

தலைமை என்பது தகுதியால் தானாகச் சேர வேண்டிய இடம் என்றும் தகுதியே தட்டுப்பாடாக இருக்கும்போது தலைமைக்கு ஆசைப்படுவது ஆகாசத் தாமரைக்கு ஆசைப்படுவதற்குச் சமம் என்றும் அவர் விமர்சித்துள்ளார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், திமுக மற்றும் தவெக நிர்வாகிகள் இடையேயான இந்த வார்த்தைப் போர் தமிழக அரசியல் களத்தைச் சூடாக்கியுள்ளது.