கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வேளிமலை வனப்பகுதியில் இருக்கும் தனியார் ரப்பர் தோட்டத்திற்கு தினமும் அதிகாலை நேரத்தில் தொழிலாளர்கள் பால்வெட்ட செல்வது வழக்கம். இந்நிலையில் சரல்விளை பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் நரிச்சிகல் பகுதிக்கு ரப்பர் பால் வெட்டுவதற்காக சென்றுள்ளார். அப்போது ஏதோ ஒரு விலங்கு ஓடியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சுரேஷ் மரத்தில் ஏறி அது என்ன விலங்கு என பார்த்துள்ளார். அப்போது பாறை மேல் சிறுத்தை மற்றொரு விலங்கை கடித்து தின்று கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அச்சத்தில் மற்ற தொழிலாளர்களுடன் சுரேஷ் ரப்பர் தோட்டத்தின் கீழ் பகுதிக்கு சென்றுவிட்டார்.

இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் ஆய்வு செய்தனர். மேலும் சரல்விளை பகுதியைச் சேர்ந்த ஹெலன் மேரி என்பவர் குழிவிளை பகுதியில் ரப்பர் பால்வெட்ட சென்றபோது பாறையில் இருந்து சிறுத்தை தாவி ஓடுவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தார். இதேபோல் கொரங்கேற்றி மலைப்பகுதியில் 3 குட்டிகளுடன் சிறுத்தை உலா வருவதை ஒருவர் பார்த்தார். எனவே சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.