சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் காந்திநகர் 5-வது தெருவில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சந்தோஷ்(8), துருவேஷ்(2 1/2) என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இதில் சந்தோஷ் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால் கொடுங்கையூர் அம்பேத்கர் தெருவில் இருக்கும் தனது தாய் வீட்டில் சந்தியா துருவேஷை விட்டு செல்வது வழக்கம். நேற்று முன்தினம் வழக்கம் போல தனது குழந்தையை பிரபாகரன் மாமியார் வீட்டில் விட்டு விட்டு வேலைக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் வீட்டின் முதல் மாடியில் நின்று விளையாடிக் கொண்டிருந்த போது ஜன்னல் வழியாக துருவேஷ் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தான். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் துருவேஷை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதனையடுத்து துருவேஷை மேல் சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் துருவேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.