ஈரோடு மாவட்டத்தில் உள்ள கடம்பூர் மலைப்பகுதி அருகே இந்திரா நகரில் ராமர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளியூரில் போர் போடும் வண்டியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் ராமரிடம் நானும் உன்னுடன் வேலைக்கு வருகிறேன் எனக்கு முன்பணம் வாங்கித்தா என கூறியுள்ளார். இதனால் ராமர் தன் வேலை பார்க்கும் போர்வெல் நிறுவனத்திற்கு கண்ணனை அழைத்துச் சென்று முன்பணம் வாங்கி கொடுத்தார்.

ஆனால் பணத்தை வாங்கிக்கொண்டு கண்ணன் சரியாக வேலைக்கு செல்லாமல் வேறு வேலைக்கு சென்று விட்டார். இதனால் ராமர் கண்ணன் வாங்கிய முன் பணத்தை நிறுவனத்திற்கு செலுத்தியுள்ளார். இது தொடர்பாக ராமருக்கும் கண்ணனுக்கும் இடையே தகுதாரி ஏற்பட்டது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்று விட்டு ராமர் வெளியூரில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். அப்போது கண்ணனிடம் நீ கொடுக்க வேண்டிய பணத்தை நான் கொடுத்து விட்டேன். எனக்கு அந்த பணத்தை தர வேண்டும் என கூறியுள்ளார்.

இதுகுறித்து அறிந்த கண்ணனின் தம்பி மாதேஷ் போதையில் ராமரை தாதவாத்தியால் திட்டி எனது அண்ணன் பணத்தை திரும்பத் தர மாட்டான் எனக் கூறியுள்ளார். மேலும் கோபத்தில் மாதேஷ் ராமரை கீழே தள்ளி கல்லால் தலையில் தாக்கினார். இதனால் படுகாயமடைந்த ராமரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனை சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியில் ராமர் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மாதேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.