திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள அன்பில் மங்கம்மாள்புரம் என்ற கிராமத்தில் வசிப்பவர் ராஜேந்திரன். இவருடைய மகள் ஜானகி (வயது 32). திருமணமாகாத நிலையில், இவருக்கு ஒருவருடன் தவறான பழக்கம்  ஏற்பட்டது. இதனால் கர்ப்பம் அடைந்த ஜானகி குழந்தை பெற்று, பின் அந்த குழந்தையை விற்றுள்ளார். இச்சம்பவத்தில் ஈடுபட்டதற்காக ஜானகி, லால்குடி அருகே உள்ள அரியூர் கிராமத்தை சேர்ந்த வக்கீல் பிரபு (42) அவரது 2-வது மனைவி சண்முகவள்ளி (38), மணக்கால் சூசையபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் (35), திருச்சியை சேர்ந்த புரோக்கர் கவிதா, ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள கருத்துரை கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் மனைவி சண்முகப்பிரியா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து  அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில்,
டெல்லியில் உள்ள குழந்தை விற்பனை கும்பலுக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதன்பின் தனிப்படையைச் சேர்ந்த சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் கடந்த 11-ஆம் தேதி டெல்லிக்கு சென்று, பின் அங்கு 3 நாட்கள் தங்கி தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இதனையடுத்து டெல்லியில் உள்ள காவல்துறை  துணையுடன், பதுங்கி இருந்த டெல்லியை சேர்ந்த குழந்தை விற்பனை கும்பல் தலைவனை கைது செய்தனர்.

பின் அவனிடம் நடத்திய விசாரணையில் அந்த குழந்தை கர்நாடக மாநிலம் வெள்ளக்கவி மாவட்டத்தில் உள்ள பாக்கியஸ்ரீ என்ற பெண்ணிடம் 5 லட்சம் ரூபாய்க்கு விற்றது தெரியவந்தது. இதன் பிறகு டெல்லியில் இருந்து கர்நாடகாவிற்கு தனிப்படை போலீசார் வந்து குழந்தையை மீட்டனர். அதன் பின் திருச்சிக்கு கொண்டு வந்து குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினரிடம் போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் ஒப்படைத்தார். மேலும் இதில் சிறப்பாக பணியற்றிய லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய்தங்கம் மற்றும் தனிப்படையினரை அனைவரும் பாராட்டி உள்ளனர்.