காஞ்சிபுரம் மாவட்டத்தை அடுத்த சிறுகாவேரிப்பாக்கத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்ட அரசு வாகனங்களுக்கான பழுதுநீக்கும் பணிமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் அரசு போக்குவரத்து வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் வினியோகம் செய்து வரும் பணி செய்து வருகிறார்.

இந்நிலையில் தனது கடைக்கு உரிமம் புதுப்பிக்க அந்த பணிமனையின் அலுவலக உதவி என்ஜினீயர் மோகனை அணுகிய போது, ரூ.30 ஆயிரம் பணம் கொடுத்தால் உரிமம் புதுப்பிக்க ஏற்பாடு செய்கிறேன் என்று கூறியுள்ளார். எனவே லஞ்சம் கொடுக்க வெங்கடேசன் விரும்பவில்லை. உடனே லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தார். அவர்களும் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து, இதை அவருக்கு கொடுங்கள் என்று கூறினர்.

அதன்படி அந்த பணிமனை மையத்திற்கு சென்ற வெங்கடேசன், அங்கு இருந்த பொறுப்பாளர் முரளியிடம் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்தவுடன், அதை உதவி என்ஜினீயர் மோகனிடம் அவர் கொடுத்துள்ளார். இதனை கண்காணித்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக மோகன் மற்றும் முரளியை பிடித்து, கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.