திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவ வார்டில் இருந்து கடத்தப்பட்ட ஆண் குழந்தை, காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கையால் 5 மணிநேரத்திற்குள் சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் பத்திரமாக மீட்கப்பட்டது. குழந்தையைக் கடத்திய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி சுகன்யா (வயது 24). இவர் பிரசவத்திற்காக கடந்த 11-ம் தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. மருத்துவமனையில் சுகன்யாவிற்கு உதவியாக அவரது உறவினர் பிரேமா என்பவர் இருந்துள்ளார்.

அதே வார்டில் சிகிச்சைக்காக வந்திருந்த ஒரு பெண், தன்னை மீனாட்சி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு சுகன்யாவிடம் நைசாகப் பேசி நட்பை ஏற்படுத்திக் கொண்டார். கடந்த சில நாட்களாக சுகன்யாவிற்கு சிறு சிறு உதவிகளைச் செய்து வந்த அந்த பெண், அவரது நம்பிக்கையைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில், இன்று காலை குழந்தைக்குத் தடுப்பூசி போட வேண்டும் என்று சுகன்யா கூறியுள்ளார். அப்போது அங்கிருந்த மீனாட்சி, “நீ ஓய்வெடு, நான் குழந்தையை அழைத்துச் சென்று தடுப்பூசி போட்டுவிட்டு வருகிறேன்” என்று கூறி குழந்தையை வாங்கிச் சென்றுள்ளார். அதே நேரத்தில் உதவியாக இருந்த பிரேமாவும் காபி வாங்க வெளியே சென்றிருந்தார்.

நீண்ட நேரமாகியும் மீனாட்சி குழந்தையுடன் திரும்பாததால் அதிர்ச்சியடைந்த சுகன்யா, மருத்துவமனை முழுவதும் தேடினார். எங்கு தேடியும் கிடைக்காததால், பதற்றமடைந்த உறவினர்கள் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

தகவலறிந்த போலீசார், மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் அந்த பெண் குழந்தையைத் தூக்கிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. அதன் அடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

செல்போன் சிக்னல் மற்றும் வாகனத் தணிக்கை மூலம் தேடியபோது, அந்த பெண் சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் இருப்பது தெரியவந்தது. விரைந்து சென்ற தனிப்படை போலீசார், கடத்தப்பட்ட 5 மணிநேரத்திற்குள் குழந்தையைப் பத்திரமாக மீட்டனர்.

கைது செய்யப்பட்ட மீனாட்சியிடம் நடத்திய விசாரணையில், “தனக்குக் குழந்தை இல்லாத ஏக்கத்தில், குழந்தையை வளர்க்க வேண்டும் என்ற ஆசையில் எடுத்துச் சென்றேன்” என அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். எனினும், இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி அரசு மருத்துவமனையில் பட்டப்பகலில் நடந்த இந்த குழந்தை கடத்தல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.