தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு, தவெக பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் சீலநாயக்கன் பட்டியில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய விஜய், “அண்ணா தொடங்கிய கட்சியை மு.க. ஸ்டாலினும், எம்.ஜி.ஆர். தொடங்கிய கட்சியை எடப்பாடி பழனிசாமியும் வைத்துள்ளனர்” என்று குறிப்பிட்டிருந்தார். இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில் அளித்தார்.

அப்போது அவர், “பாவம், அவர் (விஜய்) அனுபவமே இல்லாதவர். முதலில் அவர் வீட்டில் இருந்தும், திரிஷாவிடம் இருந்தும் வெளியே வர வேண்டும். வெளியில் வந்தால்தான் அரசியலில் எதையும் நடத்த முடியும்” என்று விமர்சித்தார். ஒரு பெண் கலைஞரை தொடர்புபடுத்தி நயினார் நாகேந்திரன் பேசிய இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நயினார் நாகேந்திரனின் இந்த பேச்சுக்கு தவெக தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது தொடர்பாக தவெக பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தனது ‘எக்ஸ்’ (X) தளத்தில் வெளியிட்டுள்ள கண்டன பதிவில் கூறியிருப்பதாவது, ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவராக இருப்பவர் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை அரசியல் கண்ணியத்தைக் கூட நயினார் நாகேந்திரன் இழந்துவிட்டார். எங்கள் கட்சியின் கிளைச் செயலாளர் கூட இவரை விடக் கண்ணியத்தோடு பேசுவார்.

அறிவாலயத்தைத் (திமுக) திட்டினால் கமலாலயத்தில் (பாஜக) இருப்பவருக்கு ஏன் காய்ச்சல் வருகிறது? அறிவாலயமும் கமலாலயமும் இப்போது ‘ஓராலயம்’ ஆகிவிட்டதா கடந்த தேர்தலில் 4 கோடி ரூபாய் சிக்கலில் சிக்கித் தவிக்கும் ஒரு நபர், அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறுவது இந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவை. கட்டைப்பையில் பணத்தோடு பிடிபட்ட ‘நாகம்’ இன்று ஊருக்கு உபதேசம் செய்கிறதா?

மேலும் அந்தப் பதிவில், “எங்கள் தலைவர் மீது விழும் அங்கீகார வெளிச்சம் உங்கள் கண்களைக் கூசச் செய்து, அறிவைக் குருடாக்கிவிட்டது. பொறாமைத் தீயில் வெந்து கொண்டிருக்கும் நீங்கள், வரம்பு மீறி விமர்சனம் செய்தால், தமிழகப் பெண்கள் உங்களுக்குத் தரப்போகும் பதிலடிக்கு உங்களால் முகம் கொடுக்க முடியாது” என்று நாஞ்சில் சம்பத் எச்சரித்துள்ளார்.

பெண் கலைஞரை இழிவுபடுத்தும் விதமாகப் பேசிய பாஜக தலைவருக்கு எதிராக சமூக வலைதளங்களிலும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.