திருப்பத்தூர் மாவட்டம் மண்டலவாடி பகுதியில் இன்று (பிப்.14) திமுக தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதற்காகச் சற்று நேரத்திற்கு முன்னதாகவே மண்டலவாடி பகுதிக்கு முதலமைச்சர் வருகை தந்துள்ள நிலையில், அரசியல் வட்டாரத்தைப் பரபரக்க வைக்கும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சரான நிலோபர் கபில், இன்று திடீரென மாநாடு நடைபெறும் இடத்திற்கு வருகை தந்துள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போதே அதிமுக-வில் சீட் மறுக்கப்பட்டு, கட்சி நிர்வாகிகளுடன் ஏற்பட்ட மோதலால் கட்சியில் இருந்து ஒதுங்கியே இருந்த அவர், இன்று முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக திமுக-வில் இணையப்போவதாகக் கூறப்படுகிறது. அதிமுக-வின் ஒரு முக்கியப் பெண் முகமாக இருந்தவர், தேர்தல் நெருங்கும் வேளையில் திமுக-விற்குத் தாவியிருப்பது அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
