தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் நடைபெற உள்ள அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டை கிராமக் குழுவினரே நடத்த அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் அமர்வு, மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது.

“ஜல்லிக்கட்டு என்பது ஒன்றும் ஐ.பி.எல். போட்டி அல்ல; இது பல போராட்டங்களுக்குப் பிறகு மீட்டெடுக்கப்பட்ட உரிமை” என்று குறிப்பிட்ட நீதிபதிகள், தனிநபர் குழுக்கள் நடத்த அனுமதி அளித்தால் சாதி ரீதியான பிரச்சினைகளும் குளறுபடிகளும் ஏற்பட வாய்ப்புள்ளதாகச் சுட்டிக்காட்டினர்.

எனவே, அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய மூன்று இடங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகளைத் தமிழக அரசின் வருவாய்த் துறையினரே ஒருங்கிணைத்து நடத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.

அந்தந்த பகுதிகளில் உள்ள அனைத்து சமுதாயப் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய ஓர் அறிவுரைக்குழுவை அமைத்து, நீதிமன்ற வழிகாட்டுதலின்படி போட்டிகளை நடத்தி முடிக்க வேண்டும் என நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.