புதிய வருமான வரிச் சட்டம் 2015-ன் கீழ், பான் கார்டு தொடர்பான விதிமுறைகளில் மத்திய அரசு பல்வேறு முக்கிய மாற்றங்களைப் பரிந்துரைத்துள்ளது. இந்த புதிய நடைமுறைகள் 2026 ஏப்ரல் முதல் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரவுள்ளன.

புதிய பரிந்துரையின்படி, வங்கிகளில் ஒரு நிதியாண்டில் 10 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை ரொக்கமாக டெபாசிட் செய்பவர்களுக்கும், அதே அளவு தொகையைத் திரும்பப் பெறுபவர்களுக்கும் மட்டுமே பான் கார்டு கட்டாயமாக்கப்பட வாய்ப்புள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள ஒரு நாளைக்கு 5000 ரூபாய் என்ற வரம்பு மாற்றப்பட்டு, ஆண்டு மொத்த பரிவர்த்தனையின் அடிப்படையில் இந்த புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட உள்ளது. இதேபோல், அசையும் மற்றும் அசையா சொத்துகளுக்கான பான் கார்டு வரம்புகளும் திருத்தப்பட உள்ளன.

ஹோட்டல் மற்றும் உணவகங்களில் ஒரு லட்சம் ரூபாய்க்குக் குறைவான கட்டணங்களுக்கு இனி பான் விவரம் அளிக்கத் தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும், சொத்து வாங்குதல் அல்லது விற்பனை செய்வதற்கான பான் கட்டாய வரம்பு 10 லட்சம் ரூபாயிலிருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது.

வாகனங்களைப் பொறுத்தவரை, 5 லட்சம் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள இருசக்கர வாகனங்கள் அல்லது இதர வாகனங்களை வாங்கும் போது பான் எண் சமர்ப்பிப்பது அவசியமாகும். இத்தகைய மாற்றங்கள் சாமானிய மக்களின் நிர்வாகச் சுமைகளைக் குறைப்பதுடன், பெரிய அளவிலான பணப் பரிவர்த்தனைகளைத் துல்லியமாகக் கண்காணிக்கவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.