உலகம் முழுவதும் காதலர் தினம் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வரும் வேளையில், உத்தரப் பிரதேச மாநிலம் கௌதம புத்தா நகர் மாவட்டத்தில் அரங்கேறியுள்ள ஒரு துயரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது காருக்குள் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் ஒரு ஆணும், ஒரு பெண்ணும் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையின்படி, அந்த நபர் முதலில் பெண்ணைச் சுட்டுவிட்டு, பின்னர் தானும் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது. உயிரிழந்தவரின் கையில் ஒரு கைத்துப்பாக்கி இருந்ததை போலீஸார் கண்டறிந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடல்களைக் கைப்பற்றி விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் டெல்லியைச் சேர்ந்த சுமித் மற்றும் உத்திரபிரதேசத்தை சேர்ந்த ரேகா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணவில்லை என இவர்களது குடும்பத்தினர் ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். சடலங்கள் தற்போது பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. சம்பவத்தில் தொடர்புடைய கார் டெல்லி பதிவு எண் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சுமித்தின் செல்போனை ஆய்வு செய்தபோது, அவர் அனுப்பிய வாட்ஸ்அப் செய்தி ஒன்று சிக்கியுள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது,
“நானும் (சுமித்) ரேகாவும் இறக்கப் போகிறோம். இதற்கு ரேகா தான் காரணம். அவர் என்னுடன் 15 ஆண்டுகள் வாழ்ந்தார், என்னைத் திருமணம் செய்துகொள்வதாகவும் உறுதியளித்தார். ஆனால் இப்போது அவர் வேறொருவரைத் திருமணம் செய்யப் போகிறார். அவர் எனக்குச் செய்த துரோகத்தால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன்”.
இந்த உருக்கமான செய்தி காதலில் ஏற்பட்ட ஏமாற்றமே இந்த விபரீத முடிவுக்குக் காரணம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. போலீஸார் தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
