பீகார் முதல்வர் நிதிஷ் குமார் புதிதாகத் திறந்துவைத்த 3.45 கி.மீ உயரமான பட்னா மெட்ரோ பாதையில், 2-3 நாள்களுக்குள்ளேயே குட்காவை சாப்பிட்டு விட்டு சுவற்றில் எச்சில் துப்பிய சாயம் ஒட்டிக் கொண்டிருப்பது மக்கள் மனதை சலிப்பாக்கியிருக்கிறது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில், மெட்ரோ ஸ்டேஷனின் மேடைகள், ரெயிலிங், தரை, மற்றும் தண்டவாளங்கள் வரை எல்லாம் சிவப்புக் கறைகளால் அழுக்காக மாறியிருப்பது தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை பதிவு செய்துள்ள பாட்னா வலைப்பதிவாளர் ரௌணக் அகர்வால், “இன்னும் 2-3 நாள் கூட ஆகல, குட்கா கேங் வந்துட்டாங்க. நிஜமாவே கொஞ்சம் அவமானமா இருக்கு பிஹார் மக்களே. அரசு நல்ல வேலை பண்ணிட்டு இருக்கு, நீங்க இதைதான் திரும்ப தர்றீங்க” என்று மனவேதனையோடு கூறுகிறார்.
குறுகிய காலத்திலேயே 32,000-க்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ள இந்த வீடியோ சமூகத்தில் கோபத்தையும், அவமானத்தையும் எழுப்பியுள்ளது.
இதற்கிடையில், மற்றொரு சமூக வலைதள பயனர், “சிசிடிவி கேமராக்கள் மூலம் இவர்களை கண்டுபிடிச்சு, அவர்களாலேயே அந்த இடத்தை சுத்தம் செய்ய வைக்கணும். அப்போ தான் மக்கள் மாறுவாங்க. குப்பை போட்டா, அடுத்த ஒரு மணி நேரம் தெருவையே சுத்தம் செய்ய வச்சுடணும்,” எனக் கடுமையாக கண்டித்துள்ளார்.
தற்போது மெட்ரோ சேவைகள் தினமும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை 20 நிமிட இடைவெளியில் இயங்குகிறது. ஆனால் மக்கள் ஒழுக்கமின்றி நடந்தால், இத்தகைய மேம்பாடுகள் வீண் என்றே சொல்ல வேண்டியிருக்கும்.
